தந்தை பெரியார் (கவிதை)

தந்தை பெரியார்

தாடியும் தடியும்
தாத்தாவின் தனித்துவம்
பகுத்தறிவு சிந்தனை
ஐயாவின் மகத்துவம்

மானமும் அறிவும்
மனிதனுக்கு அழகு
பண்பும் பகுத்தறிவும்
நித்தம் நீ பழகு
என்ற பாவலர்

பாரினை பாழாக்கிய
பழைய சித்தாந்தங்களை
பகுத்தறிவு சிந்தனை கொண்டு
பண்படுத்திய பண்பாளர்

சுயமரியாதை அற்று
சுற்றி திரிந்த மக்களுக்கு
சுயமரியாதை சுடர் ஒளி
ஏற்றி வைத்த அன்பாளர்

மனிதன் மரணிக்கும் வரை
மறவாமல் இருப்பது
தனிமனித ஒழுக்கம்
அதனால் தான்
தமிழ்ச் சமூகம் தழைக்கும்
என்ற கொள்கை தந்தவர்

தான் கொண்ட
கொள்கை பின்பற்றுவதில்
கொடூர கொலைக்காரன்
தமிழ்ச் சமூகத்தை சீர்திருத்துவதில்
நல்ல வேலைக்காரன்

தமிழக வீதிகளில் எல்லாம்
தன்மானம் தழைத்திட
போராட்டம் நடத்திய
மாபெரும் போராளி

மூட நம்பிக்கையில்
மூழ்கிய மூடர்களை
தர்க்கம் பேசி
மூர்க்கமான அறிவுரைகளை
வழங்கிய அறிவாளி

‘இனிவரும் உலகம்’
எப்படி இருக்கும்
என்று எடுத்துரைத்த
முற்போக்குச் சிந்தனையாளர்

‘பெண் ஏன் அடிமையானாள்’
என்ற புத்தகத்தை வழங்கிய
சிறந்த படைப்பாளர்

சாதி சமயங்களை
சாக்கடை என
சாடிய தலைவன்
மக்கள் மனதில்
அவர் என்றும்
அழியாத நிரந்தர
தலைவன்

பெண்களுக்கான
திருமண வயதை
திருத்திய திருமகன்

பெண்கள் முன்னேற்றத்திற்கு
போராடிய பெருமகன்

பொன்னும் பொருளும்
பல வகை ஆடை இருக்க
அவர் உடுத்திய ஆடை கந்தை

பெண்கள் எல்லோரும்
சேர்ந்து கொடுத்த பட்டம் தந்தை

அவர் இப்படியெல்லாம்
வாழ்ந்தாரா? என்பது விந்தை

சாதி மதமற்ற
பகுத்தறிவுச் சமூகத்தை
உருவாக்குவதே அவரின் சிந்தை

கவிஞர் முனைவர் செ.சதீஷ்குமார்

 

முனைவர் செ.சதீஷ்குமார்

Tags: No tags
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments